politics

img

பெண்களுக்கான அதிகாரம் : ஆர்எஸ்எஸ்சின் போலி முகமூடி

சமீபத்தில் நடைபெற்ற சர்வதேசப் பத்திரிகைகளைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் காஷ்மீரில் 370ஆவது பிரிவை ரத்து செய்தல், தேசிய குடிமக்கள் பதிவை  அமல்படுத்துதலின் விளைவு, நிலைமையை “சரி செய்வதற்கான” குடியுரிமை திருத்த மசோதா, ராமர் கோவில் கட்டுவது போன்ற விஷ யங்கள் குறித்து அவர் விவாதித்திருந்தார். இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு இருக்கின்ற நிலைப்பாட்டை மோகன் பகவத்  எடுத்துக்  கூறிய தில், பெண்கள்  குறித்த அவருடைய  பேச்சு முற்றிலும் ஆச்சரி யமடைய வைப்பதாக இருந்தது. 

“பெண்களின்  முன்னேற்றத்திற்கான  வழிகளைத் தீர்மா னிக்கின்ற திறன் ஆண்களிடம் இல்லை. பெண்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். பெண்கள் தங்கள் தொடர்பான  முடிவுகளை எடுப்பதில்  வல்லவர்கள் ” (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 2019)  என்று  அவர் கூறியிருந்தார். அவரு டைய இந்தப்  பேச்சு  இதுவரை  பொதுவெளியில் பெண்கள் பற்றி ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளவை, அதன்  கொள்கை அல்லது நடத்தையில் பிரதிபலிக்கிற கருத்துக்கள் ஆகிய வற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருப்பது தெரிந்தது.  ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இதுவரையிலும் தேசியவாதக் கட்டமைப்பில்  பெரும்பாலும் பிராமணிய ஆணாதிக்கத் தாக்கம் கொண்டதாக, தேசம் குறித்து அதீத ஆண்மையப்படுத்தப்பட்ட கருத்தாக்கம் கொண்டு ஆண்களுக்கு அடிபணிந்திருக்கும் நிலையை பெண்களுக்குத் தருகின்ற அமைப்பாகவே அறியப்பட்டு வருகிறது.

ஆர்எஸ்எஸ் மாறிவிட்டதா?

பெண்களின் தாக்கத்தை முன்னிலைப்படுத்தி, அவர்க ளுடைய முடிவெடுக்கும் திறனைப் பாராட்டுகின்ற பகவத்தின் பேச்சை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? பெண்களைத் தன்னுடைய அமைப்பிற்குள் சேர்த்துக் கொள்ளாத அமைப்பாக, இன்றும் முழுமையான ஆண்களின் கோட்டை யாகவே ஆர்.எஸ்.எஸ் இருந்து வருகிறது. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின்  நிறுவன சர்சங்சாலக் (தலைவர்) கேசவ்.பி.ஹெட்கேவாரை தொடர்ந்து லக்ஷ்மிபாய்  கேல்கர் வற்புறுத்திய பிறகுதான், ராஷ்ட்ர சேவக் சமிதி  என்ற பெண்க ளுக்கான அமைப்பை உருவாக்குமாறு அவர் ஆலோசனை கூறினார். அந்த சமிதி ஆர்.எஸ்.எஸ்சின் துணை அமைப் பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  கருத்தியல்  வேர்களைப் பாதுகாக்கின்ற வகையிலேயே செயல்பட்டு வருகிறது. அப்படி என்றால், இப்போது என்னதான்  மாற்றம் ஏற்பட்டி ருக்கிறது?  இப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின்  குணமும், தன்மை யும் மாறியிருக்கிறதா? அனைவரையும் உள்ளடக்குவதாக, முற்போக்கானதாக அந்த அமைப்பு மாறி விட்டதா? இது போன்றதொரு கூட்டத்தை  வெளிநாட்டு ஊடகங்களுடன் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்  ஏற்பாடு  செய்ததற்கென்று ஏதேனும்  குறிப்பிட்ட  காரணம் இருக்கிறதா?  ஆட்சியில் இருக்கின்ற பாஜகவைக் கட்டுப்படுத்துகின்ற அமைப்பாக இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பால்  சித்தரிக்கப்படுகின்ற இந்த மாற்றத்தை  நாம்  எவ்வாறு  எடுத்துக் கொள்வது? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு, ஆர்.எஸ்.எஸ்  சித்தாந்த மையத்தை  மறுபரிசீலனை  செய்வதோடு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மாற்றங்களுக்கு உள்ளாகாத வகையில்  தன்னிடம் தக்க வைத்துக் கொண்டிருக்கும் கொள்கைகளை யும், அந்த அமைப்பால் சமரசம்  செய்து கொள்ளக்கூடிய  கொள்கைகள்  யாவை  என்பது குறித்தும் நாம்  அறிவது  அவசியமாகிறது.

எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தங்களுடைய கருத்தியலுடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத விவசாயி கள், தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், தொழிலாளர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை தங்களுடைய சித்தாந்தத்தின் கீழ் கொண்டு வருவதற்கான எண்ணற்ற வழிகளை கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குள் ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி இருக்கிறது. பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்  பயணித்து வந்திருக்கின்ற சிக்கலான இந்தப் பாதையில் பெண்களுக்கு இதுவரையிலும் அவர்கள் கொடுத்து வந்தி ருக்கும் நிலை, பாத்திரம் இன்னும் அப்படியே  இருக்கிறதா  அல்லது பகவத்தின் இந்தப் பேச்சு இடைப்பட்ட கட்டத்தை பிரதிபலிப்பதாக இருக்கின்றதா என்பதைக்  கண்டறிவது  கவனத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். தேசியவாதம்  மற்றும் பாலினம்  ஆகியவற்றுக்கிடையில் பெண்களுக்கு இருக்கின்ற தொடர்புகள், பங்குகள் குறித்து நுண்ணறிவு கொண்ட பல ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின் றன. தன்னுடைய எழுத்துக்கள், சித்தாந்தவாதிகளின் சிந்த னைகள் மற்றும்  உயர்மட்டத்தில் இருப்பவர்களின் அறிக்கை கள் மூலமாக பெண்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ்  அமைப்பு கொண்டிருக்கும் நிலைப்பாடு பற்றி பல ஆய்வாளர்கள் ஆய்ந்துள்ளனர். அந்த ஆய்வுகளின் அடிப்படையில், அவர்களால்  பெண்களுக்கென்று வழங்கப்பட்டிருக்கும் சில முக்கியமான பாத்திரங்களைத் தெளிவாக நம்மால் அடை யாளம்  காண  முடிகிறது.

பகவத் கூறுவதன் அர்த்தம் என்ன?

அவர்கள் பெண்களுக்கு அளித்து வந்திருக்கும் முக்கிய  பாத்திரங்களைக் காண்பதற்கு முன்பாக, தங்கள் முன்னேற் றத்திற்காக  பெண்களால் தாங்களாகவே முடிவுகளை  எடுக்க முடியும் என்று பகவத் கூறுவதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம். சமுதாயத்தில் பெண்களுக்கான தாக்கம் மற்றும் சமத்துவம் இருப்பதாக அவர் விளக்கும் போது, பின்வரும் கேள்விகளை நாம் எதிர்கொள்கிறோம். தங்கள் வேலையைத் தேர்ந்தெடுப்பதில்  உரிமை கொண்டவர்களாக பெண்கள் இருக்கிறார்களா?  தங்கள் உடல் மீது அவர்களுக்கு உரிமை இருக்கிறதா?  குடும்பங்களுக்குள் ஆண்களுக்கு சமமானவர்களாக பெண்கள் இருக்கின்றார்களா? குடும்பங்க ளில் ஆண்களைப் போலவே  பெண்களுக்கும் சொத்துரிமை போன்ற உரிமைகள்  இருக்கின்றனவா? வீட்டு வேலைக ளைத் தாங்களாகவே தேர்வு செய்வது, தங்களுக்கான இணையை சுதந்திரமாகத் தேர்வு செய்வது போன்ற உரிமை கள் அவர்களுக்கு இருக்கிறதா?  பாலினம் சார்ந்து பெண்களுக்கென்று வரையறுக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் இருந்து  அவர்களால்  விடுபட முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இல்லை என்பதே உறுதி யான பதிலாக இருக்கிறது. மேலாதிக்க  சித்தாந்தத்தால் நிர் வகிக்கப்படுகின்ற பிற அமைப்புகளைப் போலவே  ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்  “பிறர்”  என்பதைக் கட்டமைத்து, அவர்க ளை விலக்கி வைப்பதன் அடிப்படையிலே தனக்கான தேசத்தை  கற்பனை  செய்து கொள்கிறது.   கலாச்சார  தேசியவா தத்தை மையமாகக்  கொண்ட அமைப்பு  என்று  தன்னை அழைத்துக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்  அந்த தேசியவா தத்தின்  மூலம்  ஹிந்து  ராஷ்டிரத்தை நிறுவ விரும்புகிறது. ஹிந்து மதத்திற்கான முக்கியத்துவம் மற்றும் மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்ற அந்த ஹிந்து ராஷ்டிரம் முஸ்லிம்கள்  மற்றும்  பிற  விளிம்புநிலை சமூகங்களை விலக்கி வைத்து அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வதாக இருக்கிறது.

பெண்கள் முடிவெடுப்பதற்கு எதிராக...

ஆர்.எஸ்.எஸ்சால் வீடுகளுக்குள் ஒதுக்குப்புறமான இடங்களுக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள் என்றால், கணிசமான   எண்ணிக்கையில்  ஆர்.எஸ்.எஸ்  சித்தாந்தத் தைப் பின்பற்றுகின்ற பெண்களின் நிலையை எவ்வாறு விளக்குவது?  தேசம் என்பதைக்  கட்டியெழுப்புகின்ற திட்ட மானது, பெண்கள் பொது இடங்களுக்கான அணுகலைப் பெறுவதற்கான உரையாடலை அனுமதிக்கிறது.  ஆனால் ஆணாதிக்க விதிமுறைகள் அல்லது கட்டமைப்புகளை  அகற்றுவதன்  விளைவாகவோ அல்லது ஆணாதிக்கத்தை எதிர்த்து நிற்பதன் விளைவாகவோ அரசியல்  மற்றும்  சமூக  வாழ்க்கையை  பெண்கள் அணுகுவதாக இல்லாமல், ஹிந்துத்துவ சித்தாந்தத்தின்  அடிப்படையில், ஹிந்து ராஷ்டிரத்தின் கட்டமைப்பின் அடிப்படையிலே அது ஏற்படு வதாக இருக்கிறது.   பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதை அனுமதிப்ப தாகவோ, ஆண்களுக்கான பண்புகளை (தற்காப்பு வகுப்பு கள் மற்றும் ஆயுதப் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தருவது) பெண்கள் தங்கள் வசம் எடுத்துக் கொள்ளலாம் என்றோ ஆர்.எஸ்.எஸ் கூறினாலும், பெண்களுக்கான பாத்திரம் மற்றும் நிலைமை  இன்னும் மாறாமலேதான் இருக்கிறது.  அவர்கள் தருகின்ற இந்த ஆண்பாலினப் பண்புகள், ஹிந்து ராஷ்டிரத்தின் ஆண்மையப்படுத்தப்பட்ட கலாச்சா ரத்தை மேம்படுத்தவும், ஆணாதிக்கத்தை வலுப்படுத்து கின்ற வகையில் அனைத்து பெண்களும் பின்பற்ற வேண்டிய நல்லொழுக்கங்களின் உருவகமாக இருக்கின்ற பாரத மாதாவை  முஸ்லிம்கள் களங்கப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சுறுத்தலை  ஊக்குவிப்பதற்குமே  இறுதியில் பயன் படுகின்றன.

பெண்களுக்கென்று சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் முக்கியமான பங்கு ஆர்.எஸ்.எஸ்  கொண்டுள்ள ஹிந்து ராஷ்டிரம் என்ற கருத்தாக்கத்திலிருந்தே வெளிப்படுகின்றது. இவ்வாறு ஒதுக்கப்படுகின்ற பங்குகளின் மீது தனித்துவ மான கவனம் செலுத்துவது, ஏற்கனவே ஆணாதிக்க அமைப்புகளில்  அவை செயல்பட்டு வருகின்ற  விதம் பெண்கள் முடிவெடுப்பதற்கு எதிராக இருந்து தீங்கையே  விளைவிக்கின்றன.

குடும்பம் என்ற கருத்தாக்கம்

குடும்பம் என்பது ஆர்.எஸ்.எஸ்சைப்  பொறுத்தவரை,  சமூகத்தின் அடிப்படையான மிக முக்கியமான அலகாகவும், “இந்திய” விழுமியங்களின் அடித்தளமாகவும் இருக்கிறது. குடும்பத்தின் நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துவதாக இருக்கின்ற “குடும்ப பிரபோதன்” அல்லது குடும்ப  விழிப்பு ணர்வு என்ற  திட்டத்தைச் செயல்படுத்துகின்ற அளவிற்கு ஆர்.எஸ்.எஸ்  சென்றுள்ளது. குடும்பத்திற்கான உணவு, நடத்தை போன்றவற்றைப் பரிந்துரைப்பதோடு, குடும்பத்திற் குள் நடக்க வேண்டிய விவாதங்களையும் இந்த திட்டம் பரிந்து ரைக்கிறது. அந்த திட்டத்தின்  இணை  அமைப்பாளர் ரவீந்திர ஜோஷி  “பரம்பரை, கடவுளர்கள்,  தர்மம், தேசபக்தி  பற்றி  குடும்ப உறுப்பினர்கள்  விவாதிக்கலாம்”  என்று கூறுகிறார். குடும்பத்திற்குள்ளும் பாலினம் சார்ந்த பங்குகள் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து எந்தவொரு விலகலும்  வெறுப்புக்குரியதாகிறது.

வீட்டிற்கு வெளியே வேலை செய்கின்றனரா என்பதைப்  பொருட்படுத்தாமல்  பெண்களின்  முதன்மைக் கடமை  தாய்மை என்று சொல்லப்படுகிறது. “ஆணின் வேலை பணம் சம்பாதிப்பது - ஆண்மை என்பது அவனது குணம், அதே சமயம் பெண்ணின் குணம் தாய்மை. அதை அவள் ஒருபோ தும் மறக்கக்கூடாது” என்று ராஷ்டிரிய சேவிகா சமிதி ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராஷ்டிரிய  சேவிகா  சமிதியின் வடக்கு பிராந்தியப் பொறுப்பாளர் சந்திரகாந்தா கூறினார் (ஐயங்கார், 2017) . குடும்ப சமநிலையைக் (சமத்துவமின்மையை?) குலைக்கின்ற எந்தவொரு சர்ச்சையும் உண்மையில் தவிர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பெற்றோர் வழியி லான மூதாதையர்  சொத்தில்  ஹிந்துப் பெண்கள் பங்கு பெறுவதை, “பெண்களின்  உரிமைகளுக்கும்,  நமது  பாரம்பரி யங்களுக்கும் இடையில்  சமநிலை இருக்க வேண்டும். சாஸ்திரங்களின் அடிப்படையிலேயே அது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அது சகோதரிகளை நமது சகோதரர்களுக்கு எதிராக நிறுத்தி குடும்பங்களைப் பிளவு படுத்தி விடும்” (பரத்வாஜ், 2016) என்று கூறி சமிதியின்  பொதுச் செயலாளர்  சீதா அன்னாதனம்  பெண்களுக்கான சொத்து ரிமை குறித்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்கிறார்.

பகவத் கூறுவது உண்மைதானா?

தொடர்ந்து திருமணம் சார்ந்த வல்லுறவு என்று எதுவுமில்லை என்று கூறிய அவர், தங்கள் கணவருடனான பாலியல் உறவில் பெண்களுக்கென்று எந்தக் கருத்தும் இல்லை என்பதோடு பாலியல் உறவை மறுப்பதற்கான உரிமையும் அவர்களுக்கு இல்லை. அவ்வாறு மறுப்பதன் மூலம் திருமணத்தின் மூலம் கிடைக்கின்ற “பேரின்பம்” பாதிக்கப்படும் என்கிறார். “திருமணம் சார்ந்த வல்லுறவு  என்று எதுவுமில்லை. திருமணம் என்பது  ஒரு புனிதமான பந்தம். இணைந்து வாழ்வது பேரின்பத்திற்கு வழிவகுக்கும். இந்த பேரின்பத்தின் கருத்தை நாம் புரிந்து கொண்டால், அனைத்துமே சீராக இயங்கும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

கணவனால் கைவிடப்பட்டு விடுவோம் என்பதால் திருமணத்திலும், குடும்பத்திலும் பெண்கள் எவ்வாறெல்லாம்  அடிபணிந்திருந்தார்கள்  என்பதை பகவத் கடந்த காலங்களில் விளக்கியுள்ளார். “நீ என் வீட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நான்  உன்னுடைய அனைத்து தேவை களையும் கவனித்துக் கொள்வேன். நான் உன்னைப் பாது காப்பாக  வைத்துக் கொள்வேன் என்று கணவன் கூற, கண வனும், மனைவியும் ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். கணவர் அந்த ஒப்பந்த விதிமுறைகளைப் பின்பற்றுகிறார். அந்த ஒப்பந்தத்தை மனைவி பின்பற்றுகிற காலம் வரை கணவர்  அவளுடன்  இருக்கிறார். மனைவி  ஒப்பந்தத்தை மீறி னால், கணவன் அவளைக் கைவிட முடியும்” என்று பகவத் கூறியிருக்கிறார் (ஜா, 2013).  ஆர்.எஸ்.எஸ்   விவரித்துள்ள வாறு, குடும்பத்தின் அதிகாரப் படிநிலை கட்டமைப்பில் தங்க ளுக்கென்று சொந்த உரிமைகள் இல்லாமல் எளிதில் கைவிடப்படும் வகையில் முக்கியத்துவமற்றவர்களாக பெண்கள் இருப்பார்கள் என்றால், தங்கள் முடிவுகளை பெண்களே எடுக்க முடியும்  என்று பகவத்  கூறுவது உண்மைதானா?

தாய் என்ற பாத்திரம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் ஹிந்து ராஷ்டிரம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு  மையமாக தாய்மை இருப்பது விளக்கப்பட்டுள்ளது.  ஆர்.எஸ்.எஸ்சைப் பொறுத்த வரை, தாய்மை இரண்டு குறிப்பிடத்தக்க வழிகளில் முக்கிய மானதாக இருக்கிறது. முதலாவதாக, குழந்தைகளைப் பெற்றெடுக்க இயலும் பெண்கள்,  இனப்பெருக்கத்தின் மூலமாக ஹிந்து ராஷ்டிரத்திற்கான வீரர்களை  உருவாக்கித் தருவார்கள். இரண்டாவதாக,  உயிரியல்ரீதியில் இனப் பெருக்கம்  செய்து உருவாக்குகின்ற வேலையைச் செய்வது மட்டுமல்லாமல், குழந்தைகளை  வளர்க்கும் போது கலாச்சா ரம்  அல்லது  “சங்கராக்களை”யும் அவர்கள் உருவாக்கித் தருவார்கள்  என்றும்,  இந்த  தாய்மார்கள் ஹிந்துத்துவா, பாரதத்தின்  புகழ்பெற்ற  கடந்த  காலம்  மற்றும்  ஹிந்து ராஷ்டிரத்தின் மீதான நீண்டகால அவா ஆகியவற்றிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்றும் அவர்கள் எதிர்பார்க்கி றார்கள் (பானர்ஜி, 2003). இதுவே ஹிந்து  தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற பகவத்தின் நிலைப்பாட்டிற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

கருவுறுதல் விகிதம்  ஒப்பீட்டளவில்  ஹிந்துக்களிடையே குறைவாக இருப்பதால், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து ஹிந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள் என்ற  அச்சம் கொண்டவராக அவர்  “இதுதான்  நிலைமை என்றால், 2025க்குள் தன்னுடைய சொந்த  நாட்டில்  இருப்பதையே  ஒருவர் மறந்துவிட வேண்டும் ”(பரத்வாஜ் & மிஸ்ரா, இந்தியன் எக்ஸ்பிரஸ், 2016). என்று எச்சரிக்கை விடுத்தார். குழந்தைகளுக்கு விழுமியங்களை வழங்குவதிலும், அதன் மூலம் சமுதாயத்தையும் தேசத்தையும் வலுப்படுத்துவ திலும் பெண்ணின் முக்கியப் பங்கு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டபோது, தாய்மார்களாக பெண்க ளுக்கு முக்கியப் பங்கு இருப்பதை பகவத் ஒப்புக் கொள்கிறார். “எங்கள் குடும்ப வியாஸ்தா [குடும்ப அமைப்பு] உலகின்  கவனத்தை  ஈர்த்துள்ளது” என்று அவர்  கூறினார் (ஜா, 2016).

கற்பு

பெண்களிடம் இருக்கின்ற கற்பு, பெருமை போன்ற மற்ற  குணங்களே சமூகத்தில் பெண்களுக்கு இருக்கின்ற மரியாதையைத்  தீர்மானிக்கின்றன என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ் நிலைநிறுத்துகிறது. அடையாளத்தைச் சுமப்பவர்களாக சமூகத்தின் பெருமையைப் பெண்கள் பிரதி நிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதால், சமூகத்திற்கு “அவ மதிப்பை” ஏற்படுத்துகின்ற எந்தவொரு உறவையும்  பெண்கள் ஏற்படுத்தி விடக் கூடாது என்று அவர்களிடமிருந்து எதிர் பார்க்கப்படுகிறது. பெண்களின்  உடல் மீது  உறுதியான கட்டுப்பாடுகளை அந்த எதிர்பார்ப்பு கொண்டு வருகிறது. எனவே “லவ் ஜிஹாத்” என்ற பெயரில், மதங்களுக்கு இடை யிலான திருமணங்களுக்கு  எதிராக தீவிரமான பிரச்சா ரத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டதில்  ஆச்சரியம் எதுவுமில்லை.

ஹிந்து ராஷ்டிரமே ஆர்.எஸ்.எஸ்சின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. அதன்  கட்டுமானத்துடன்  ஒருங்கி ணைந்து இருக்கின்ற சில கருத்துக்கள்  ஹிந்து ராஷ்டிரத்தில் விட்டுக் கொடுக்க முடியாதவையாக  உள்ளன. பெண்களை அடிபணிந்த நிலையிலேயே ஹிந்து ராஷ்டி ரத்தின் பாலின கட்டுமானம் வைத்திருக்கிறது. தெய்வங்க ளாகவும், பாரதமாதாவாகவும் ஆர்.எஸ்.எஸ்சால் பெண்கள் தூக்கி நிறுத்தப்பட்டாலும், அது வெற்றுத் தோற்றமாகவே இருக்கிறது. பெண்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி, அத்தகைய அடக்குமுறையை வலியுறுத்துவதன் மூலம் ஆணாதிக்கம் மற்றும் ஆணாதிக்க கட்டமைப்புகளை  ஆதரிக்கின்ற அந்த அமைப்பில் பெண்களுக்கென்று எந்த அதிகாரமும் இருக்கவில்லை. அவ்வாறான கட்டமைப்பு களே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குறிக்கோள்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன.

வெளிநாட்டு ஊடகத்திடம் வெற்றுப் பாவனை...

ஆகவே  பெண்களின் நிலை குறித்த பிரச்சனைகளில்  ஆர்.எஸ்.எஸ் மிகவும் தாராளமாக மாறி வருகிறது என்று வெளிநாட்டு  ஊடகத்திடம் சித்தரிக்க முயன்ற வெற்றுப் பாவனையாகவே பகவத்தின்  அந்த வார்த்தைகள்  இருக்கின்றன. கடந்த  ஆண்டு  தில்லி விக்யான்  பவனில்  “எதிர்கால இந்தியா - ஆர்எஸ்எஸ்சின்  முன்னோக்குப் பார்வை” என்று மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் உரையாற்றிய  பின்னர், தற்செயலாக இந்த  சந்திப்பிற்கான ஏற்பாடு  செய்யப்பட்டது

அண்மையில் நடந்த கூட்டத்தைப் போலவே  அந்த மாநாடும் ஆர்.எஸ்.எஸ் குறித்த பிம்பத்தை சரி செய்யும் முயற்சியில், ஆர்.எஸ்.எஸ்ஸை  அனைவரையும் உள்ளடக்கு கின்ற அமைப்பாகவும், இந்தியாவின் ஒற்றுமை  குறித்த பார்வை  கொண்ட அமைப்பாகவும்  சித்தரிப்பதையே  நோக்க மாகக்  கொண்டிருந்தது. அந்த மாநாட்டிலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நீண்டகால சித்தாந்தத்திற்கும், சித்தாந்தவாதி களுக்கும் முரணாக இருக்கின்ற கருத்துக்களையே பகவத் முன்வைத்தார். 

அனைவரையும் ஏற்றுக் கொள்ள வைத்து அதற்கான ஒப்புதலைப்  பெறுவதற்கான முயற்சிகளாகவே அவருடைய பேச்சுக்கள் இருக்கின்றன. தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் அசாமில் வசித்து வருகின்ற 19 லட்சம் மக்களை இருப்பிட மற்றவர்களாக ஆக்கி அவர்களை தடுப்பு  மையங்களில் வைத்து விட்டு, அறுபது நாட்களுக்கு மேலாக காஷ்மீரை முடக்கி வைத்து விட்டு சர்வதேச கவனத்தையும் கண்டனத்தையும்  நாட்டில் நிலவுகின்ற கொந்தளிப்பிலிருந்து திசை திருப்புகிற முயற்சிகளாகவே இந்த பேச்சுக்கள் இருக்கின்றன! இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையை கேலி செய்யும் நேர்மையற்ற வெற்று வார்த்தைகளாகவே பகவத்திடம் இருந்து வருகின்ற இந்த வார்த்தைகள் இருக்கின்றன.zz

நன்றி: கேரவன் நாளிதழ் 2019 அக்டோபர் 04 
 தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு









 

;